சில உறவுகளை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். சில உறவுகள் தானே அமைபவை. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் உங்கள் தாய் தந்தையரை நீங்கள் தேர்ந்தெடுக்க வில்லை. அந்த உறவுகள் எல்லாம்  தானாகவே அமைந்தவை தானே? அதே போல் தான் சகோதர சகோதரிகள் உறவுகளும். உங்கள் உறவினர்களும் இந்த வகையைச் சேர்ந்தவர்களே.   நீங்கள் தேர்ந்தெடுக்காத உறவுகள் அவை. இவை யாவும் உங்களுக்கு விதிக்கப்பட்ட உறவுகள் என்றே சொல்ல வேண்டும். 

சில உறவுகளை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணை மற்றும் நண்பர்களை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். இவை நீங்களாகவே தேர்ந்தெடுத்த உறவுகள். நல்ல கணவனும் மனைவியும் அமைவது இறைவன் கொடுத்த வரம் என்பது வேறு விஷயம். அது ஒரு சில புண்ணியவான்களுக்கே அமைகிறது என்று சொல்லுகிறார்கள்.

உங்களுக்கு விதிக்கப் பட்ட உறவுகள் ஆனாலும் சரி, அல்லது நீங்களாகவே தேர்ந்தெடுத்த விதிக்கப்படாத உறவுகளானாலும் சரி, சில உறவுகள் மிகவும் முக்கியமானவை. அந்த உறவுகளை நீங்கள் மிகவும் போற்றத்தான் வேண்டும். உங்கள் பெற்றோர்கள், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் இவர்கள் மீது  நீங்கள் நிபந்தனையற்ற அன்பு செலுத்த வேண்டும். அவர்கள் உங்கள் அன்பை திருப்பித் தந்தாலும் தராவிட்டாலும் நீங்கள் அவர்களை ஒரு போதும் வெறுக்க கூடாது. அவர்களிடம் இருந்து நீங்கள் எதையும் எதிர்பாராதீர்கள்.

தன்னலமற்ற அன்பு என்பது மிகவும் உயர்ந்தது. அதை நாம் எல்லோரிடமும் காட்டுவது சற்று சிரமம் தான். குறைந்தபட்சம் நமது பெற்றோர்கள், குழந்தைகள் மற்றும் வாழ்க்கைத் துணையிடம் மட்டுமாவது நாம் தன்னலமற்ற அன்பைக் காட்டினால் அது சிறந்த வாழ்வை நமக்கு வழங்கும் என்பதில் ஐயமில்லை.

வாழ்க வளமுடன் 

ஒப்பிடுதல் முன்னேற்றத்திற்கு தேவையா?

எல்லாம் விதிப் படி தான் நடக்கிறதா?

Post a Comment

 
Top