இந்த உலகத்தில் செய்த நன்றியை மக்கள் எவ்வளவு எளிதில் மறந்து விடுகிறார்கள்? அது மட்டுமல்ல உதவி செய்தவர்களை திட்டவும் செய்கிறார்கள். பகையாளியாகப்  பார்க்கவும் செய்கிறார்கள். நன்றி கெட்ட உலகமடா சாமி! மேலே படியுங்கள்..... 



நல்லவர்களுக்குக்  காலமில்லை என்பார்கள். கலியுகத்தில் அது மிக சரியாகவே இருப்பதாகவேத் தோன்றுகிறது. பெற்றோர்கள் செய்யும் உதவிகளை பிள்ளைகள் மறந்து விடுகிறார்கள். பிள்ளைகள் செய்யும் உதவிகளை பெற்றோர்களும் மறந்து விடுகிறார்கள். ஒரு பிள்ளை பெற்றோருக்கு அதிக உதவிகளை செய்யலாம். ஒரு பிள்ளை பெற்றோருக்கு செய்ய விருப்பப்படாமல் இருக்கலாம். அல்லது அவர்களால் பெற்றோருக்கு உதவ முடியாமல் இருக்கலாம். எப்பொழுதும் உதவி செய்த பிள்ளை ஏதோ தவிர்க்க முடியாத காரணங்களால் பெற்றோருக்கு செய்யும் உதவியை தற்காலிகமாக நிறுத்தினாலும் அந்த நல்ல பிள்ளைக்குத் தான் அவப் பெயரும் கெட்ட பெயரும் வந்து சேரும். அந்நாள் வரை அந்த பிள்ளை செய்த உதவிகள் யாவும் மறக்கப் படும். இது தானடா உலகம். 

அரசாங்க அலுவலகத்தில் ஒழுங்காக வேலைசெய்வர்களுக்குத் தான் வேலைப்  பளு அதிகம் இருக்கும். 'ஓபி' அடிப்பவர்கள் முழு சம்பளத்தை வாங்கிக் கொண்டு நிம்மதியாக இருப்பார்கள். வேலை குறித்த நேரத்தில் முடிய வில்லையென்றால் கெட்ட பெயர் வாங்குவது நன்றாக வேலை செய்தவர்களே. 

நான் ஒரு வெப்சைட்டில் ஆங்கிலத்தில் எழுதி வந்தேன். அந்த வெப்சைட் நம்ப முடியாத அளவுக்கு எங்களுக்கு அதிக பணம் கொடுத்தது. உலகம் முழுவதிலும் எழுத்தாளர்கள் அந்த வெப்சைட்டில் எழுதி  நன்றாக பணம் சம்பாதித்து வந்தனர். சமீபத்தில் அவர்களால் எங்களுக்கு பணம் கொடுக்க முடியவில்லை. திவால் என்று சொல்லி கையைத் தூக்கி விட்டது அந்த  வெப்சைட். அவ்வளவு தான். எல்லா நாட்டு எழுத்தாளர்களும் அந்த வெப்சைட் நிறுவனரை அசிங்கமாகத் திட்டி தீர்த்து விட்டனர். அது வரை அவர்களுக்கு கொடுத்த அபரிதமான பணத்தை எல்லாம் அடியோடு மறந்து விட்டனர். இப்பொழுது புதிதாக வந்த  இன்னுமொரு வெப்சைட்டில் அடிமாட்டு விலைக்கு எழுதுகின்றனர். அந்த புதிய வெப்சைட்டை ஆஹோ ஓஹோ என்று புகழ்கின்றனர்.  நன்றி கெட்ட உலகமடா சாமி!

சரியான நேரத்தில் செய்த உதவியை கூட எத்தனை பேர் மறந்து விடுகின்றனர்? ஒரு காலத்தில் உதவி செய்தவர்கள் நொடித்து போய் விட்டால் அவர்களை  முற்றிலும் புறக்கணித்து விடுகின்றனர் என்பது நிஜம். உதவி செய்பவர்களுக்கு எல்லாம் பிழைக்கத் தெரியாதவன் என்ற பட்டம் தான் இறுதியில் மிஞ்சுகிறது.

செய்த நன்றியை ஒருபோதும் மறக்க வேண்டாம். உதவி செய்தவரை போற்றாவிட்டாலும் பரவாயில்லை. தூற்றாமலாவது இருக்க வேண்டும். அதை விட முக்கியமான விஷயம் என்னவென்றால் நாம் யாரிடம் எல்லாம் அதிக அன்பு செலுத்துகிறோமோ அவர்கள் நம்மிடம் நன்றி மறந்தவர்களாக இருந்தாலும் நாம் அவர்களிடம் எப்பொழுதும் போல் அன்பு மாறாமல் நடந்து கொள்ள வேண்டும். இது சற்று கடினம் தான். ஆனால் மனம் பக்குவப் பட்டு விட்டால் அப்படி ஒன்றும் கஷ்டமாக இருக்காது என்றே நினைக்கின்றேன்.

வாழ்க வளமுடன்!

நீங்கள் மற்றவர்களிடம் எதிர்பார்க்கக் கூடாத 6 விஷயங்கள் 

நல்லவர்கள் துன்பப் படுவது ஏன்?

Post a Comment

 
Top