இன்று இந்த நவீன உலகில் நம்மில் பலர் செய்யும் மிகப் பெரிய தவறு  அநாவசிய  செலவுகள் செய்வது தான். அநாவசிய செலவுகளைத்  தவிர்ப்பது எப்படி என்பதைப் பார்ப்பதற்கு முன் எவை எல்லாம் அநாவசிய  செலவுகள் என்பதை பார்ப்போம்.


நமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நாம் செய்யும் செலவுகளைத் தவிர இதர இத்தியாதி செலவுகள் அனைத்தும் அநாவசிய  செலவுகளே! எல்லோரும் மூன்று வேளை  நல்ல உணவு உண்ண வேண்டும். நல்ல சுத்தமான ஆடைகள் அணிய வேண்டும். வசிப்பதற்கு நல்ல ஒரு வீடு வேண்டும். நம் குழந்தைகள் நல்ல பள்ளிகளில் படிக்க வேண்டும். தேவைப்படும்போது நல்ல மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். இவை எல்லாம் அடிப்படைத் தேவைகளே.

உங்கள் வருமானத்திற்கு தகுந்தபடி நீங்கள் செலவு செய்ய வேண்டும். நீங்கள் நடுத்தர வர்க்கத்தில் இருந்தாலோ அல்லது ஏழையாக இருந்தாலோ உணவு விடுதியில் (Hotel) சென்று அடிக்கடி உணவு உட்க்கொள்ளுவதை தவிர்க்கலாமே! ஆடம்பர ஹோட்டல்களிலும் , கேளிக்கை அரங்குகளிலும் உங்கள் பணத்தை வீணாக  செலவழிப்பது  தவறு தானே?

உங்கள் வருமானத்திற்குத்  தகுந்த கார் மாருதி 800 என்றால் அத்துடன் திருப்தி அடைய வேண்டும். 'BMW' உங்கள் சொந்தக்காரரோ அல்லது அடுத்த வீட்டுக்காரரோ வைத்திருக்கிறார் என்பதற்காக  அதை நீங்கள் வங்கி கடன் வாங்கி வாங்குவது தற்கொலைக்கு சமானம் தானே?

அடுத்தவர்களுக்காக வாழ்வதை முதலில் நிறுத்துங்கள். அவர்கள் அதை வாங்கி விட்டார்களே, இவர்கள் இதை வாங்கி விட்டார்களே என்று நீங்களும் அவற்றை வாங்கி பின் கடனில் மூழ்காதீர்கள். சொந்த அண்ணன் தம்பிகளும், அக்கா தங்கைகளும் போட்டிப் போட்டு தேவை இல்லாத பொருட்களை  வாங்கி கடனில் மூழ்கி விழிப் பிதுங்கி நிற்பதை நான் பார்த்து அவர்களுக்காக பரிதாபப்  பட்டிருக்கிறேன்.

வெட்டி ஜம்பத்திற்காக தகுதிக்கு மீறி கல்யாணத்திற்கு செலவு செய்து விட்டு தெருவுக்கு வந்தவர்கள் எத்தனை பேர்? ஆடம்பர ஆடைகள், ஆடம்பர நகைகள் கிரெடிட் கார்டில் வாங்கி வங்கிக்கு பதில் சொல்ல முடியாமல் தவிப்பவர்கள் எத்தனை பேர்?

கடைக்குப் போகும் முன் தேவையான் பொருட்களின் பட்டியலை தயார் செய்யுங்கள். கடையில் அவற்றைத்  தவிர வேறு பொருட்களை வாங்கக்  கூடாது என்பதில் உறுதியாக இருங்கள். வியாபாரிகள் இலவசங்கள் அது இது என்று உங்களை கவர்ந்திழுப்பார்கள். அவர்கள் வலையில் விழாமல்  இருப்பது உங்கள் சாமர்த்தியம்.

இன்று ஆன்லைன் ஷாப்பிங் மோகம் நிறைய பேரிடம் உள்ளது. சில பொருட்களின் விலை கம்மியாக இருப்பதால் பலர் தேவை இல்லாத பொருட்களை எல்லாம் ஆன்லைனில் வாங்கித் தள்ளுகிறார்கள். பிறகு அவைகளைப் பயன்படுத்துவதே இல்லை என்பது தான் கொடுமை.

சேமிக்க பழக வேண்டும். இது மிகவும் முக்கியம். நீங்கள் மாதம் ஒரு லட்சம் சம்பாதித்தாலும் ஒன்றரை லட்சம் செலவு செய்தால் ஏழை தான். கடவுள் கூட உங்களைக்  காப்பாத்த முடியாது என்பது நிஜம். திடீரென்று அத்தியாவசியமான மருத்துவச்  செலவுகள் வரலாம். நம் சேமிப்பில் பணம் இல்லை என்றால் அடுத்தவரிடம் கடன் கேட்க வேண்டிய சூழ் நிலை ஏற்படும். நெருங்கிய சொந்தக்காரர்களே நம்மைப் பார்த்தால் ஓடி ஒளிவார்கள்  நாம் ஏதாவது அவர்களிடம் கடன் கேட்டு விடுவோமோ என்று பயந்து. தேவைதானா  இது நமக்கு?

உங்களின் உதிரி பணத்தை சேமியுங்கள். கொஞ்சம் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்யுங்கள். கொஞ்சம் பணத்தை தங்கத்தில் முதலீடு செய்யுங்கள். கொஞ்சம் பணத்தை அஞ்சலகத்தில் சேமியுங்கள். மீதி பணத்தை நிலத்தில் முதலீடு செய்யுங்கள்.

பணம் இல்லாதவனை கட்டியப் பொண்டாட்டி கூட மதிக்க மாட்டாள். பணம் இல்லாதவன் இந்த உலகில் பிணத்திற்கு சமம் என்பதே நிதர்சனம்.

ஊதாரித்தனமாக செலவு செய்யாதீர்கள். கடன்காரனாகி ஓடி ஒளிந்து வாழாதீர்கள். சேமித்து சிக்கனமாக வாழப் பழகுங்கள். நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் , மதிப்பு மரியாதையோடும் கௌரவமாக வாழுங்கள்.

வாழ்க வளமுடன்!



Post a Comment

 
Top