குழந்தைகளின் சிரிப்பில் இறைவனைப் பார்க்கலாம் என்பார்கள். அது எவ்வளவு உண்மை? ஒரு குழந்தை சிரிக்கும் போது நாம் நம்மையே மறப்போம். அதுவும் சிரிப்பது நம் குழந்தையாய் இருந்தால் நாம் இந்த உலகத்தையே மறந்து மகிழ்வோம். ஏனென்றால் குழந்தையின் சிரிப்பு அவ்வளவு உண்மையானது. புனிதமானது. எல்லோரின் உள்ளங்களையும் கொள்ளையிடும் அற்புத ஆற்றல் குழந்தையின் சிரிப்புக்கு நிச்சயம் உண்டு என்றே சொல்ல வேண்டும். ஒரு குழந்தையைப் போல் மகிழ்ச்சியாய் இருப்பது எப்படி? மேலே படியுங்கள்.......


குழந்தைகளால் மட்டும் எப்படி அவ்வளவு அழகாக உண்மையாக சிரிக்க முடிகிறது? அது இயல்பாக, உண்மையாக சிரிக்கும் சிரிப்பு என்பதால் தான் அது அவ்வளவு அழகாக இருக்கிறதோ? குழந்தைகள் நடந்த கெட்ட அல்லது கஷ்டமான விஷயங்களை  உடனே மறந்து விடுவார்கள். தாய் அடித்தாலோ அல்லது கிழே விழுந்தாலோ அழும் குழந்தைகள் உடனே நொடிப் பொழுதில் அவற்றை மறந்து அற்புதமாக சிரிப்பார்கள். வேண்டாத பழசை மறக்கும் ஆற்றல் உள்ளவர்கள் குழந்தைகள் என்பது நிஜம்.


அதே போல் குழந்தைகள் வருங்காலத்தைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்வதே இல்லை என்பதே உண்மை. வருங்காலத்தைப் பற்றி எந்த கவலையும் குழந்தைகளுக்கு இல்லை. அதுவே அவர்களது வரப் பிரசாதமும் கூட எனலாம். மேலும் அவர்கள் தங்கள் பெற்றோர்களை முழுமையாக நம்புகிறார்கள். நாம் கடவுளைக் கூட அரைகுறையாகத் தான் நம்புவோம். ஆனால் குழந்தைகள் பெற்றோரை முழுமையாக நம்புவதால் கவலையே இல்லாமல் வாழ்கிறார்கள். அவர்கள் சிரிப்பு புனிதமாக இருப்பதில் வியப்பில்லையே?

மேலும் குழந்தைகளுக்கு பெரியவர்கள் போல் அவ்வளவு ஈகோ கிடையாது. மேலும், அவர்கள் உடனே மன்னிக்கும் சுபாவம் உடையவர்கள். அதனால் தான் அவர்களால் அவ்வளவு இயற்கையாக சிரிக்க முடிகிறது. நாம்
குழந்தைகளிடமிருந்து கற்றுக் கொள்ள  வேண்டியவை இவை. அல்லது இப்படி சொல்லலாம். நாம் மறந்து விட்ட நல்ல குணங்களைத் திரும்ப பெற்றால் நாமும் குழந்தைகள் போல் களங்கமே இல்லாமல் சிரிக்கலாம்.

வாழ்க குழந்தைகள்! வாழ்க வளமுடன்!!








Post a Comment

 
Top