ஒரு ஆணும் பெண்ணும் பருவ வயது அடைந்த பின் திருமணம் செய்யத் துடிக்கின்றனர். இது ஒன்றும் தவறில்லை. ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒரு குடும்பத்தை உருவாக்கி அதை விருத்தி செய்வது என்பது சரியான விஷயம் தான். இயற்கையான விஷயமும் கூட. ஆணுக்காகவே பெண் படைக்கப்பட்டிருக்கிறாள். பெண்ணுக்காகவே ஆண் படைக்கப்பட்டிருக்கிறான். இருவரும் ஒருவொருக்கொருவர் பூர்த்தி செய்து இருவரும் முழுமை அடைகிறார்கள் தாம்பத்தியத்தில். ஆனால்  திருமணம் என்பது உடல் சுகம் மட்டுமல்ல. பொறுப்புகளை சுமப்பது. சுமைகள் நிறைந்தது. ஒரு ஆணோ அல்லது பெண்ணோ திருமணம் செய்யாமல் வாழவே  முடியாதா? மேலே படியுங்கள்....



அது சரி, நாம் எதற்காக திருமணம் செய்கிறோம்? ஆணுக்கு பெண்ணின் சில தன்மைகள் பிடிக்கும். அவைகள் அவனுக்குத் தேவையாய் இருக்கின்றன.  அதே போல் தான் பெண்ணுக்கும் ஆணின் சில தன்மைகள் தேவையாய்  இருக்கின்றன. இருவருக்கும் உடல் சுகம் தேவை. இதற்கெல்லாம் மேலாக ஒரு குடும்பம் உண்டாக்க, குழந்தைகள் பெற்றெடுக்க ஒருவொருக்கொருவர் தேவையாய்  இருக்கின்றனர். மேலும், குடும்பம் என்பது இருவருக்கும் ஒரு பாதுகாப்பு உணர்வைத் தருகிறது. பெண்கள் பொருளாதாரத்திலும் ஆண்களை சார்ந்து இருக்கின்றனர். மனித வாழ்வு வாரிசு பெற்றெடுக்கும் போது தான் முழுமை அடைகிறது. பிள்ளைகளும் சுமை தான். வாழ்க்கைத் துணையும் , பிள்ளைகளும் சுவையான சுமைகள். அதனால் தான் எல்லோரும் தெரிந்தே இந்த சம்சார சுழலில் சிக்குகிறார்கள் என்பது நிஜம்.

ஆக, உடல் சுகம், குடும்பத்தை உருவாக்குவது, பாதுகாப்பான வாழ்க்கை வாழ்வது, வாரிசுகளைப்  பெறுவது போன்ற முக்கியமான காரணங்களுக்காகத் தான் பெரும்பாலும் ஆணும் பெண்ணும் திருமணம் செய்கிறார்கள். அது  சரி, இவற்றிற்கெல்லாம் சேர்ந்து வாழ்ந்தால் போதாதா? திருமணம் செய்யத்தான் வேண்டுமா என்று நீங்கள் கேட்கலாம். இந்த சமுதாயம் திருமணம் என்கின்ற ஒப்பந்தத்தை பெரிதும் மதிக்கிறது. சமுதாயத்திற்காகவே திருமணம் செய்து கொள்வது அவசியமாகிறது.

இன்றும் ஒரு சில ஆண்களும் பெண்களும் துணை இல்லாமல் வாழ்ந்துக் கொண்டுதானிருக்கிறார்கள். அவர்கள் திருமணம் செய்யாமலிருப்பதிற்கு பல காரணங்களிருக்கலாம். வேலை இல்லாதது, பொருளாதார சூழ் நிலை, குடும்ப சூழ் நிலை, உடலில் உள்ள குறைகள், பொறுப்புகள் ஏற்க விரும்பாதது மற்றும் பல விதமான காரணங்களால் சிலர் திருமணம் ஆகாமல் வாழ்கிறார்கள்.

திருமணம் செய்யாமல் வாழ முடியாதா? நிச்சயம் முடியும். இன்னும் சொல்லப் போனால் ஆண் பெண்ணின் துணை இல்லாமலும், பெண் ஆணின் துணை இல்லாமலும் இன்றைய விஞ்ஞான உலகில் வாழ முடியும் என்பது உண்மை தான். அது அவரவர் தேவைகள் மற்றும் விருப்பம் இவற்றைப் பொறுத்தது ஆகும்.

அக்கரைக்கு இக்கரைப் பச்சை என்பது போல் திருமணமானவர்கள் ஆகாதவர்களைப்  பார்த்தும், ஆகாதவர்கள் ஆனவர்களைப் பார்த்தும் ஏங்கலாம். ஆணும் பெண்ணும் ஒருவொருக்கொருவர் பூர்த்தி செய்து பாதுகாப்புடனும், நிம்மதியுடனும் சந்தோஷத்துடனும் வாழ்வது தான் சிறப்பு என்றே நான் நினைக்கின்றேன்.

திருமணம் செய்யாமல் வாழ முடியாதா? நிச்சயம் முடியும். ஆனால் அது தேவையா என்பது தான் சிந்திக்க வேண்டிய விஷயம்.

வாழ்க வளமுடன்!

திருமணம் யாருக்குத் தாமதமாகும்?

திருமணத்திற்கு ஜோதிடம் பார்ப்பது அவசியமா?

Post a Comment

 
Top