மனிதன் ஒரு சமூக மிருகம் (Social animal) என்பது உண்மை தான். அவனால் தனியாக வாழ முடியாது. அவனுக்கு குடும்பம் மற்றும் அன்பு தேவைப் படுகிறது. நாம் ஒருவரை ஒருவர் சார்ந்து தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனாலும் நாம் மற்றவரிடம் அதிகம் எதிர்பார்க்காமல் வாழ்வது சாலச் சிறந்தது எனலாம். கட்டிய கணவனிடத்திலும், மனைவியிடத்திலும் கூட நாம் அதிகம் எதிர்பார்க்கக் கூடாது. அப்படி இருக்கும் போது நாம் மற்றவரிடம் அதிகம் எதிர்பார்க்கக் கூடாதல்லவா? நீங்கள் மற்றவர்களிடம் எதிர்பார்க்க கூடாத 6 விஷயங்கள் பற்றி இங்கே காண்போம்.


1. நீங்கள் உங்களை எல்லோரும் விரும்புவார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது. உங்கள் வீட்டில் உள்ளவர்கள் உங்களை ராஜாவாகவோ அல்லது ராணியாகவோ வளர்த்திருப்பார்கள். ஆனால் வெளியே வந்தால் அதே அன்பை,  நீங்கள் மற்றவரிடம் எதிர்பார்க்க முடியாது. மற்றவர்கள் உங்களை வெறுக்கவும் கூடும் என்பதை மறந்து விடக் கூடாது.

2. மற்றவர்கள் உங்களுக்கு அதிக மரியாதை  கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும்  தவறு தான் . இன்று சமுதாயத்தில் மக்கள் பணத்திற்கும் பதவிக்கும் தான் மரியாதை அளிப்பார்கள். உங்களுக்கு மற்றவர்கள் போதிய மரியாதை அளிக்கத் தவறினால் அதையே நீங்கள் ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறி காண்பியுங்கள். அவர்கள் தானாக முன் வந்து மரியாதை உங்களுக்குத் தருவார்கள்.

3. நீங்கள் சொல்வது எல்லாம் சரி, சரி என்று எல்லோரும் தலையை  ஆட்ட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு விதம். அவரவருக்கு எண்ணங்கள், விருப்புகள் வெறுப்புகள், முக்கியத்துவங்கள் வேறு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

4. மற்றவர்கள் உங்களின் விருப்பம் போல் மாற வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். உண்மை என்னவென்றால், இவ்வுலகில் அவர்களாகவே விரும்பினால் ஒழிய நாம் யாரையும் மாற்றவே முடியாது. ஏன், கணவனை மனைவியால்  மாற்ற முடியாது. மனைவியை கணவன் மாற்றவே  முடியாது. மாறுவது போல் அவர்கள் நடிக்க வேண்டுமானால் செய்யலாம்.

5. நீங்கள் கஷ்டப் படும்போது மற்றவர்கள் உங்களுக்கு உதவ வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். அதுவும் நீங்கள் அவர்களுக்கு இது வரை எந்த உதவியும் செய்ய வில்லை என்றால் அவர்கள் மட்டும் உங்களுக்கு உதவ வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன நியாயம்?

6. நீங்கள் உதவி செய்தவர்கள் உங்களுக்கு உதவ வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு இல்லை தான். ஆனால் இது நன்றி கெட்ட உலகம் என்பது தான் கொடூரமான உண்மை ஆகும். நீங்கள் ஒருவருக்கு மாதா  மாதம் பண உதவி செய்து விட்டு ஒரு மாதம் நிறுத்தி விட்டால் உதவி பெற்றவர் உங்களை பழிப்பார் என்பது தான் கலியுக நிதர்சனம் ஆகும்.

உங்கள் காலிலேயே நின்று பழகுங்கள். மிகவும் தேவைப் படும் போது மட்டுமே மற்றவரின் உதவியை நாடுங்கள். அவர்கள் உதவ மறுத்தால் வருத்தமோ, கோபமோ அடையாதீர்கள். அவர்கள் உதவி இல்லாமலே உங்களால் வாழ முடியும் என்று அவர்களுக்கு நிருபித்துக் காட்டுங்கள்.

வாழ்க வளமுடன்!

எதிர்பாராததை எதிர்பாருங்கள் 

கோபப் படுபவர் எல்லாம் கோழைகளா? 

Post a Comment

 
Top