புது மணத் தம்பதிகள் மிகவும் அன்யோன்யமாய் இருப்பது ஒன்றும் உலக அதிசயமில்லை. காமம் அப்பொழுது  சற்று தூக்கலாக இருக்கும்போது மற்ற குறைபாடுகள் கண்களில் தெரியாததாகையால் அன்யோன்யத்திற்கும், சந்தோஷத்திற்கும் அளவே இருக்காது அப்பொழுது. 30 நாள் மோகமும் 60 நாள் ஆசையும் தீர்ந்த பிறகு குறைகள் நிறையவே கண்ணுக்கு புலப்பட ஆரம்பிக்கும். அன்யோன்யமும் குறைய ஆரம்பிக்கும். இது தான் பொது விதி ஆகும்.



ஒரு சில தம்பதிகள் மட்டும் காலன் அவர்களைப் பிரிக்கும் வரை எப்படி அவ்வளவு அன்யோன்யமாய் வாழ்கிறார்கள்? எனது தாத்தாவும் பாட்டியும் 75 வருடங்களுக்கு மேல் மிகவும் அன்யோன்யமாய் வாழ்ந்தனர். எமன் எங்கள் பாட்டியை அழைத்து செல்லும் வரை அவர்களுக்குள் இருந்த அந்த அன்பும், ஆசையும், கேலியும், கிண்டலும் குறையவே இல்லை. என்ன அற்புதமான தாம்பத்யம்? நினைக்கும் போதே உடல் சிலிர்க்கிறது. எத்தனை பேருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம்?

எப்படி ஒரு சில தம்பதிகளால் மட்டும் இறுதி வரை ஆசை குறையாமல் அன்யோன்யமாய் வாழ முடிகிறது? இது ஒரு மில்லியன் டாலர் கேள்வி தானே? இதற்கான பதிலை அறிய மனம் விரும்புகிறதல்லவா? எனது அறிவுக்கு எட்டிய காரணங்களை இங்கே உங்களுடன் மகிழ்வோடு பகிர்ந்துக் கொள்ளுகிறேன்.

அத்தகைய தம்பதிகள் ஒருவர் மீது மற்றொருவர் கொண்ட உடற்கவர்ச்சி சற்றேனும்  குறையாமல் பார்த்துக்கொண்டிருப்பார்கள் கடைசி வரை.  இருவரும் நிறைய விஷயங்களில் ஒத்த கருத்து கொண்டவராக இருப்பார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இருவரில் ஒருவரோ அல்லது இருவருமோ அதிகமாக விட்டுக் கொடுத்து போகும் குணம் கொண்டவராக இருப்பார்கள். 'தான்' என்னும் 'Ego' வை அவர்கள் தங்கள் துணையிடம் காண்பிப்பதே இல்லை என்பது நிஜம்.பெரும்பாலும் பெண்களே இத்தகைய அன்யோன்ய உறவு நீடிக்க காரணமாகிறார்கள். அத்தகைய பெண்கள் தன கணவருக்குப் பிடிக்காத விஷயங்களை  தங்களால் இயன்ற அளவு செய்யாமல் பார்த்துக் கொள்ளுகிறார்கள்.

மேலும் இத்தகையான பெண்கள் தங்களுக்கு தன்  கணவரைத் தவிர வேறு எந்த  ஆண்  மீது எந்த ஈர்ப்பும் ஏற்பட வாயிப்பில்லை என்பதாக முற்றிலும்  புரிய/நம்ப  வைத்திருப்பார்கள். மேலும் இவர்களால் ஒருவரை ஒருவர் சில நாட்கள் கூட பிரிய இயலாது. 

உங்களுக்கு இந்த மாதிரியான அற்புத தம்பதிகளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறதா? வருங்காலத்தில் இத்தகைய தம்பதிகளை காண முடியுமா என்ற ஐயம் என்னுள் எழுகிறது. முற்றிலும் அழிந்து விட்ட டைனசோர்களைப் போல் இல்லாமல் இவர்கள் நீடித்து இவ்வுலகில் வாழ்ந்து காதலுக்கு அழகு சேர்க்க வேண்டும் என்பதே என் ஆசை.

வாழ்க இலட்சிய தம்பதிகள்!

வாழ்க வளமுடன்! 







உங்கள் வாழ்க்கைத் துணையை எப்படி  தேர்ந்தெடுப்பீர்கள்?

உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்குப் பொருத்தமானவர் தானா எண்  கணிதம் படி? 

Post a Comment

 
Top