உண்மையான சந்தோஷம் அடைவது எப்படி என்பதை அறிவதற்கு முன்னால் உண்மையான சந்தோசம் என்பது என்ன என்பதைப் பற்றி சற்று பார்ப்போம். எது  நிலையானதோ அதுவே உண்மையானது ஆகும். நிலையான சந்தோஷம் தான் உண்மையான சந்தோசம் ஆகும். அதை அடைவது எப்படி? 


உயிர் போகும் பசி எடுக்கும் போது ஒரு கவளம் சோறு அமிர்தமாய் ருசிக்கிறது. சொர்க்கமே அந்த ஒரு கவளச் சோற்றில் தெரிகிறது. அதே சோறு நீங்கள் வயிறு புடைக்க சாப்பிட்டபின் அதே சந்தோஷத்தைக் கொடுக்க முடியுமா? ஒரு பருக்கை  சோறு கூட ஒரு நிலைக்கு பின் சாப்பிட முடியாது அல்லவா?  வாந்தி எடுக்கும் நிலை ஏற்படும். சந்தோஷத்தைக் கொடுத்த அதே சோறு அப்போது நரகமாகிப்  போகும். நிரந்தரமற்ற அது உண்மையான சுகம் அல்ல.

காம சுகமும் அப்படியே. சொர்க்கமாய் தெரியும் கட்டில் சுகம் அளவுக்கு அதிகமாய் ஒரே மூச்சில் தொடரப்படும் போது காமம் கசந்து தள்ளிப் படுக்கும் நிலை வந்து விடும். காமம் நிரந்தர சுகம் அல்ல. உண்மையான சுகமும் அல்ல.

பணம் கொடுக்கும் சுகம், மது கொடுக்கும் சுகம், மற்றைய போதை வஸ்த்துக்கள் கொடுக்கும் சுகங்களும் அப்படியே நிரந்தரமற்றவை. உண்மையான் சுகத்தைக்  கொடுக்கமுடியாதவை அவை.

அப்படியானால் நிரந்தரமான, உண்மையான சுகம் தான் என்ன? நாம் நம்மை உணரும் போது, நம்முள் இருக்கும் இறை சக்தியை உணரும் போது, அந்த இறைவனுடன் தொடர்பு கொள்ளும்போது பேரின்பம் கிடைக்கும். அந்த இன்பம் துய்க்க  துய்க்க சலிக்காது. இன்பமும் குறையாது. அது தான் நிலையான உண்மையான சந்தோஷம் ஆகும்.

தினமும் சிரத்தையோடு தியானம் செய்தால் நாம் நம்மை உணரலாம். நம்முள் இருக்கும் இறை சக்தியை உணரலாம். பேரின்பத்தை அனுபவிக்கலாம். உண்மையான சந்தோஷம் நமக்கு வசப்படும். அது ஒன்றும்  எளிதான காரியம் அல்ல என்று எனக்கும் தெரியும். எந்த பெரிய சாதனைகளும் சிறிய முயற்சிகளில் தான் ஆரம்பிக்கின்றன. தியானம் செய்வோம். உண்மையான சந்தோஷத்தை அனுபவிப்போம்.

வாழ்க வளமுடன்!

             உங்கள் மனதின் அற்புத சக்திகள்

அவமதிப்பை உங்களால் தாங்கிக் கொள்ள முடியுமா?

Post a Comment

 
Top